மூன்று இளைஞர்கள் கைது pt desk
குற்றம்

வேலூர் | வழிவிடுமாறு ஹாரன் அடித்த முதியவர் அடித்துக் கொலை - மூன்று இளைஞர்கள் கைது

வேலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஹாரன் அடித்ததால் அவரை அடித்துக் கொன்றதாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாநகர் வேலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (55). இவர் நேற்று (27.02.2025) வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இருந்து பில்டர் பெட் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிவிடுமாறு தனது இருசக்கர வாகனத்தில் இருந்து ஹாரனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்கள் முதியவர் வெங்கடேசனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், முதியவரை தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடிய மக்கான் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (20), தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த அஜய் (26), ஜவஹர் (26) ஆகிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.