குற்றம்

வேலூர்: கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக கணவன் கைது - பரபரப்பு வாக்குமூலம்

webteam

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவன் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த பாலமதி மலையில் பாறை இடுக்கில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், கடந்த 27 ஆம் தேதி பாகாயம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். இதையடுத்து பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பெண்ணிண் உடலில் இருந்த கடிதத்தை கைபற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை, இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பாலமதி மலைக்கு அழைத்துச் செல்வதும், பின்னர் இளைஞர் மட்டும் தனியாக திரும்பும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து அந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில், அவர், வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன் கார்த்தி (22) என்பதும், அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குள்ளச்சாவடியைச் சேர்ந்த குணப்பிரியாவை (22) இன்ஸ்ட்டாகிராம் மூலம் பழகி காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்தியை பிடித்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கார்த்தி தனது காதல் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில்... 'குணப்பிரியா சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவருக்கு இன்ஸ்ட்டாகிராம் மூலம் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் கார்த்தி தனது காதல் குறித்து வீட்டில் தெரிவித்துள்ளார். ஆனால், பெற்றோர் காதலை ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து கார்த்தி கடந்தாண்டு குணப்பிரியாவை காட்பாடி அடுத்த வள்ளிமலை முருகன் கோயில் மலையடிவாரத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து கார்த்தி வீட்டில் அவர்களை சேர்க்காததால் வேலூர் விருப்பாட்சிபுரத்தில் உள்ள கார்த்தியின் நண்பர் வீட்டில் 2-மாதம் தங்கியுள்ளனர். இந்நிலையில், குணப்பிரியா 5-மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து தனது பெற்றோரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கோரி குணப்பிரியா, கார்த்தியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குணப்பிரியா, சிதம்பரத்தில் உள்ள சித்தி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் இருந்து விட்டு கடந்த 26 ஆம் தேதி இரவு வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்குச் வந்துள்ளார்.

அப்போது கார்த்தி அவரை, இருசக்கர வாகனத்தில் ஏற்கனவே தங்கியிருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது குணப்பிரியா அங்கு செல்ல விரும்பாததால் பாலமதி மலையில் உள்ள கோயிலில் ஒருநாள் இரவு மட்டும் தங்கிவிட்டு காலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறலாம் என்று அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வாடகை வீட்டில் குடியேறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கார்த்தி அங்கு கிடந்த கட்டையால் குணப்பிரியா தலையில் அடித்துள்ளார்.

அதில், அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்துள்ளார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத கார்த்தி உடைந்த மதுபாட்டிலை அவரின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் குணப்பிரியா உயிரிழந்துள்ளார். அதையடுத்து மலை உச்சியில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இவ்வாறு போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கார்த்தி தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.