இருவர் நீதிமன்றத்தில் சரண்  pt desk
குற்றம்

வேலூர்: பாஜக பிரமுகர் கொலை வழக்கு - இருவர் நீதிமன்றத்தில் சரண்

வேலூரில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காட்பாடி நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சென்னாகுப்பம் பகுதி சாலையோரம் கடந்த 16-ம் தேதி பாஜக வேலூர் மாவட்ட ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் விட்டல் குமார் (47) படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விட்டல் குமார்

இதையடுத்து சந்தேக மரணம் என கே.வி.குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், விட்டல் குமார் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், திமுக பிரமுகரான நாகல் ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவர்தான் கொலைக்கு காரணம் எனவும் பாஜகவினர் கூறினர். மேலும் உடலை வாங்க மறுத்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாலா சேட் மகனின் கார் ஓட்டுநர் சந்தோஷ் (26) மற்றும் கமலதாசன் (24) ஆகிய இருவர் நேற்று காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் இருவரையும் ஜனவரி 2ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயகணேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.