செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (27). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிரசாத் சிறுமியை கடந்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சிறுமி கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இவர்களை தேடி வந்துள்ளனர். காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சி மற்றும் மூணாறுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து காவல் துறை நெருங்குவதை அறிந்து நண்பர்களின் உதவியுடன் பல இடங்களுக்கு மாறி கடந்த 20 நாட்களாக ஆட்டம் காட்டியுள்ளனர்.
இறுதியாக கே.வி.குப்பம் அருகே ஒரு குகையில் பதுங்கியிருந்த பிரசாத், இவர்களுக்கு உதவிய நண்பர்களான சூர்யா (எ) சொக்கலிங்கம், விஜய் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் பிரசாத்துக்கு உதவியதாக மொத்தம் 11 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், கைது செய்த 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.