குற்றம்

விதிகளை மீறி வாகனத்தில் கம்பி ஏற்றி சென்றவரால் பின்னால் வந்தவருக்கு ஏற்பட்ட துயரம்

webteam

விதிகளை மீறி சிறிய ரக சரக்கு வாகனத்தில் வீடு கட்டும் கம்பிகளை வாகனத்தின் மேற்கூரை மேல் ஏற்றி சென்றதால், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் கண் தலை உள்ளிட்ட பகுதிகளில் கம்பி குத்தி விபத்துக்குள்ளானது. பதபதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனம் உள்ளது. அங்கிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டுமான பணிக்கான இரும்பு கம்பிகள் கள்ளிக்குப்பத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

இந்நிலையில் அம்பத்தூர் அடுத்த புதூர் காவல் உதவி மையம் அருகே சென்றபோது சாலையை கடந்த மற்றொரு வாகனத்தில் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநர் முத்து திடீரென பிரேக் போட்டு வேனை நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வேனை தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்த ஸ்கூட்டியிலிருந்த பலத்த காயமடைந்தார். திருமுல்லைவாயல் கம்பர் தெருவை சேர்ந்த கார்த்திகேயன்(51) என்ற அவர், வேனின் பின்பக்கம் மோதினார். இதில் வேனுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பிகள் அவரது கழுத்து மற்றும் கண்ணில் குத்தி அவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த வேன் ஓட்டுநர் முத்துவை கைது செய்தனர். விபத்தில் சிக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக பாரங்களை விதிகளை பின்பற்றாமல் ஏற்றி செல்லும் வாகனங்களை போக்குவரத்து போலீசாரோ, போக்குவரத்து துறை அதிகாரிகளோ கண்டு கொள்ளாததால் அவ்வப்போது இது போன்ற பெரு விபத்துகள் நடக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.