குற்றம்

மது அருந்துவதை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அடித்துக் கொலை

webteam

பொது இடத்தில் மது அருந்திய கும்பலை தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அலுவலகம் பின்புறத்தில் தினந்தோறும் மாலை 4 மணி முதல் 5 மணி நடைபயிற்சியை மேற்கொண்டு வருபவர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கர்ராஜ்(50). இவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தது. அப்போது சங்கர் ராஜுக்கும் அந்த கும்பலுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த போதை கும்பல் அவரை கைகளால் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் கீழே நிலை தடுமாறி சரிந்த சங்கர்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரை தூக்கி பார்த்த போதை கும்பல் இறந்ததை கண்டு அவரது செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பீர்க்கன்கரணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சங்கர்ராஜின் செல்போன் சிக்னலை வைத்து பிரவின், அப்பு(எ) கிளி, வெற்றிவேல், சக்திவேல். ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் முத்துவை தேடி வருகின்றனர்.