செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் அடுத்த பலப்பலநத்தம் பகுதியில் நேற்று இரவு ஆலங்காயம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகணபதி என்பது தெரியவந்தது. இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த ஆலங்காயம் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.