குற்றம்

பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம்... ரயில் நிலையத்தில் பரபரப்பு

webteam

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு கடத்தவிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ திமிங்கல எச்சம் பிடிபட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில எச்சம் மும்பைக்கு கடத்த இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் தலைமையில் வன அதிகாரிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அழகியபாண்டிபுரம் அருகே உள்ள கடிகாரம் மனத்தைச் சேர்ந்த தினகரன் லாசர் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட சோதனையில், இரண்டு கிலோ திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெருவிளையைச் சேர்ந்த அருள், மகேஷ், பார்வதிபுரத்தைச் சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த சதீஷ், தம்மத்து கோணத்தைச் சேர்ந்த தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஒன்று இருப்பது தெரியவந்ததை அடுத்து வனத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.