குற்றம்

29 வருடம் ஏமாற்றிய பேராசிரியர் ஓய்வு பெற்றபின் கைது!

webteam

போலி சான்று கொடுத்து 29 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஏமாற்றியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வீரப்பன் என்ற அவர், கடந்த 1984ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி தாவரவியல் படித்தார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் துணையுடன் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து 1987ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 29 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய வீரப்பன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். 
இந்த நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து வீரப்பன் பணியில் சேர்ந்ததாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு 2 மாதங்களுக்கு முன் புகார் வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் வீரப்பன், போலி மதிப்பெண் சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீரப்பனை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.