Gang rape
Gang rape Image by bedneyimages on Freepik
குற்றம்

கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு தீவைப்பு! - உன்னாவில் கொடூரம்!

Snehatara

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 11 வயது பட்டியலின சிறுமி இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் சிறுமி கருவுற்றதில் அவருக்கு குழந்தை பிறந்து தற்போது 6 மாதங்களாகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த இருவர் சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். அவர்கள் இருவரும் திங்கட்கிழமை மாலை மேலும் 5 பேருடன் சிறுமியின் குடிசை வீட்டிற்கு சென்று தங்கள் மீதான வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் சிறுமியின் குடும்பத்தார் வழக்கை திரும்பப்பெற மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சிறுமியின் தாயாரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவர்கள் குடிசைக்கு தீவைத்ததில் குடிசைக்குள் இருந்த சிறுமியின் 6 மாதக்குழந்தை மற்றும் 2 மாதமே ஆன சகோதரி இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

Rape

பாதிக்கப்பட்ட சிறுமியின் மகனுக்கு 35% காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருடைய சகோதரிக்கு 45% காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சுஷில் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். மேலும் அவர்கள் நிலைமை மோசமானதால் இரு குழந்தைகளையும் மேற்சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பூர்வா வட்ட அதிகாரி சந்தோஷ் சிங் கூறுகையில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தந்தை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். இதனை எதிர்த்து, சிறுமியின் தாத்தா, மாமா மற்றும் 4 பேர் சேர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதி அவரை கோடரியால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறுமியின் தாயார் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

stop gender violence

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமிக்கு குழந்தை பிறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் தனது மகளின் கைக்குழந்தையை அழிக்கவே அவர்கள் வீட்டிற்கு தீவைத்ததாக சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.