குற்றம்

சாலையில் சென்ற பெண்மீது மாஸ்க் அணிந்து பைக்கில் வந்தவர்கள் ஆசிட் வீச்சு - வீடியோ

Sinekadhara

ஹரியானா மாநிலம் பானிபட்டில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்மீது ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்வை கம்பெனியில் வேலைசெய்து வந்த 37 வயது பெண், மாலை 6.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அப்போது மாஸ்க் அணிந்துகொண்டு திடீரென பைக்கில் அங்குவந்த இருவர் அந்தப் பெண்ணின்மீது ஆசிட்டை வீசிவிட்டு சென்றதாக அந்தப் பெண்ணின் கணவர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

விசாரணையில் இருவர் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்ததாகவும், அந்தப் பெண் அருகில்வந்தபோது ஆசிட்டை முகத்தில் வீசிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் சாட்சிகொடுத்திருக்கின்றனர். அங்கிருந்த சிசிடிவியிலும் காட்சிகள் பதிவாகி இருப்பதாக மூத்த காவல் அதிகாரி சதிஷ் குமார் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு சில ஆண்களுடன் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டதால் அவர்கள் தாக்கியிருக்கக்கூடும் எனவும் அவர்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.

முதலில் அந்தப் பெண்ணை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் அவருக்கு முகம் மற்றும் கழுத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் ரோக்தாக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர்.