குற்றம்

உடுமலை: பள்ளி மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல்களை அனுப்பியதாக தமிழ் ஆசிரியர் கைது

kaleelrahman

உடுமலை அருகே பள்ளி மாணவிக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாசமாக தகவல் அனுப்பி பேசியதாகக் கூறி தமிழ் ஆசிரியர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டுமடம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் அசோக்குமார் (37). இவர், அதே பள்ளியில் 12வகுப்பு பயிலும் மாணவியின் செல்போனில் ஆபாச வார்த்தைகளை பேசிவந்துள்ளார். இதை சிறுமி, யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில், அச்சிறுமியின் குடும்பத்தினர் செல்போனை எடுத்து பார்த்தபோது தமிழாசிரியர் சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை கண்டு அதிர்ந்து போய் கடந்த 04.01.2022 அன்று 1098 குழந்தைகள் உதவி எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல் உடுமலைப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அசோக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். விசாரனையில் அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிவந்ததும் தனிபட்ட முறையில் அவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி பேசிவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த உடுமலை மகளிர் காவல்நிலைய போலீசார், அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்