குற்றம்

தொடர் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

webteam

தக்கலை அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த அப்பட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் மேரி ரெத்தினம் (60). மூதாட்டியான இவர் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மேரி ரெத்தினத்தின் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து மேரி ரத்தினம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் தக்கலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த இளைஞர்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த நவீன் ஆன்றணி ராஜா மற்றும் வினித் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இருவரும் மூதாட்டி மேரி ரெத்தினத்தின் தங்க சங்கிலியை பறித்துச் சென்றதும் குலசேகரம் மற்றும் திருவட்டார் காவல் நிலைய பகுதிகளில் தொடர் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க சங்கிலிகளை மீட்ட தக்கலை போலீசார், சங்கிலி பறிப்புக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.