குற்றம்

`கனடாவில் வேலை, கை நிறைய சம்பளம்’- ரூ.36 லட்சத்தை பெற்றுவிட்டு மோசடி செய்த உகாண்டா நபர்!

webteam

புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு, கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (25). பிஇ பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்ட ஒருவர், தான் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் துணை உயர் கமிஷ்னர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கனடாவில் வேலை கிடைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வேறு இரு நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, போலியாக உருவாக்கப்பட்ட பணி ஆணையை தபால் மூலம் அனுப்பி வைத்து வேலைக்கான டெபாசிட், விசா உள்ளிட்டவைகளுக்காக பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பல தவணைகளாக ரூ.36 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கனடா நாட்டில் வேலை என கொடுக்கப்பட்ட ஆணையை சரிபார்த்தபோது அவை போலியானது என பவித்ராவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுதது அவர், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நைஜிரியாவைச் சேர்ந்த ரூபன் குட்நியூஸ் நாயிமிகா என்பவரை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மர்ம நபர்கள் பயன்படுத்திய இ-மெயில் ஐ.பி. முகவரியைக் கொண்டு சிபிசிஐடி பபோலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பெங்களூரில் இருந்து இ-மெயில் அனுப்பப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பெங்களூர் சென்று அங்கு, மறைந்திருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த நமேல் புரோசி (29), பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் (32) ஆகியோரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.