குற்றம்

உத்தரபிரதேசம் : காணாமல்போன இரண்டு சகோதரிகள் சடலமாக மீட்பு

webteam

உத்தரபிரதேசம் அருகே காணாமல்போன இரண்டு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பில்பிட் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஒருவருக்கு 18 வயதும், மற்றொருவருக்கு 20 வயதும் ஆகிறது. இவர்கள் குடும்பத்தினர் உத்தராகண்ட் - நேபாள எல்லையோரத்தில் உள்ள மாவட்டத்தில் தங்கி செங்கல் சூளையில் வேலைப்பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற சகோதரிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர் அவர்களை அருகில் தேட ஆரம்பித்தனர். அப்போது இருவரையும் சடலமாக கண்டெடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இவர்கள் குடும்பம் கடந்த மூன்று நான்கு மாதங்களாக செங்கல் சூளையில் வேலைப்பார்த்து வருகின்றனர். நேற்று இரவு 7 மணியளவில் 2 பெண்களும் வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளனர். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களை தேடியுள்ளனர். அப்போது சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

மற்றொரு பெண்ணின் சடலத்தை மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இன்று காலைதான் கண்டெடுத்துள்ளனர். அதன்பின்னரே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பாலியல் தொந்தரவு சம்பந்தமாக இதுவரை எதுவும் புகார் இல்லை. ஆனால் உயிரிழப்புக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இரண்டு பெண்களுக்கும் கழுத்தில் காயம் உள்ளது” என்றனர்.

இதுகுறித்து பெண்களின் தாயார் கூறுகையில், “இரண்டு பெண்களின் உடல்களும் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தான் கண்டெடுத்தோம். ஒரு பெண்ணின் உடலுக்கு அருகே செல்போன் ஒன்று கிடந்தது” என்றார்.