தீரன் பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையதாக திருவள்ளூர் மாவட்டம், வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு மற்றும் லோகேஷ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செய்யூர், கன்னிகாபுரத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் உள்ளிட்ட 4 பேரை கடந்த 17-ஆம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதலில் வடமாநில இளைஞர்களுக்கு கொள்ளையில் தொடர்பு ஏதேனும் இருக்கலாம் என்ற நோக்கத்தில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர் காவல்துறை. பின்னர் இந்த கொலையில் உள்ளூர் கொள்ளையர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக துப்பு கிடைத்துள்ளது.
இதில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அரக்கோணம் அடுத்த பாலவாய் என்ற கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஆனந்த கிருபாகரன் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பல் வீட்டில் பணம், நகை எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பழைய காட்சிப்பொருளாக வைத்திருந்த நாட்டு வகை துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.
இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை சந்தேகத்திற்கிடமாக அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் பிடிபட்டனர்.