குற்றம்

வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து தமிழ்நாட்டில் விற்பனை... இருவர் கைது!

webteam

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த வடமாநில பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மாநகர காவல்துறையினர் மற்றும் பள்ளிகரணை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இணைந்து, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து அவர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையின்போது பிடிபட்டவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்களது உடைமைகளை காவலர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர்.

இதையடுத்து காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தஸ்லிமா பீபி (47), ராமபுரத்தைச் சேர்ந்த அசோக் குமார் (30) என்பதும், இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதை தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.