ஆரணியில் நண்பர்களை நம்பி வீட்டில் மனைவியை தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற நேரத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் வசிக்கும் லாரி டிரைவர் மணிகண்டன்-ரேவதி தம்பதியினருக்கு ஷாலினி (10) என்ற மகளும் ராகுல் (8) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டனின் நண்பரான கோகுல்ராஜ் என்பவர் பெங்களுரைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆரணிக்கு அழைத்து வந்து மணிகண்டனின் வீட்டின் அருகே குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வெளியூர் வேலைக்குச் சென்றதால் ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த கோகுல்ராஜ், ஜெயசூர்யா ஆகிய இருவரும் மதுபோதையில் மணிகண்டனின் மனைவி ரேவதியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட ரேவதி, நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியதை அடுத்து ரேவதி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை செல்போனில் வீடியோ எடுத்து ரேவதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.