குற்றம்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் இரு முக்கிய குற்றவாளிகள் ஹரியானாவில் கைது

webteam

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இருவரை ஹரியானா மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 12ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் , ஆகிய பகுதிகளில் உள்ள நாங்கு ஏடிஎம் மையங்களில் இருந்த இயந்திரங்களை கேஸ் கட்டிங் மூலம் உடைத்து ரூ.72 லட்சத்தி 79 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 தனி படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில், குற்றவாளிகள் ஹரியானாவிற்கு தப்பிச் சென்றதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து ஹரியானா மாநிலம் சோனாரி கிராமத்தைச் சேர்ந்த முகமது ஆரிப், மற்றும் பைமா கேர் கிராமத்தைச் சேர்ந்த ஆசாத் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று தெரிய வருகிறது.