போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்த, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு பேரை, மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பிட்டர் வெளிகோவ்(50). இவர் கடந்த சில நாட்களாக சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இவர் தங்கி இருந்த அறையை ஓட்டல் ஊழியர் ஒருவர் சுத்தம் செய்த போது அறையில் ஏடிஎம் டிகோடர் இயந்திரம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ஓட்டல் ஊழியர் சந்தேககத்தின் பேரில் தனியார் ஓட்டலின் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஏடிஎம் டிகோடர் இயந்திரம் என்பது ஏடிஎம்,கிரெடிட் கார்டுகளின் தகவல்களை திருடும் கருவி ஆகும்.
இதனையடுத்து அவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பிட்டர் வெளிகோவை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரிடமிருந்து ஏடிஎம் என்கோடர் இயந்திரம், லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் மற்றும் தகவல்களை திருடி பணம் எடுக்க வைத்திருந்த 42 போலி ஏ.டி.எம் கார்டுகள், லேப்டாப் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து கைது செய்யபட்ட பல்கேரியா நாட்டைச் சேர்ந்த நபரை மத்திய குற்றபிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம், செம்மஞ்சேரி போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம் கார்டுகளை திருடி, அதன் மூலம் போலி கார்டுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபரும், இது போன்ற மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மற்றோரு நபரை விசாரணை செய்ததில்,சென்னை போன்று மற்ற மாநிலங்களிலும், ஏ.டி.எம் தகவல்களை திருடி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடம் மத்திய குற்றபிரிவு வங்கி மோசடி பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.