குற்றம்

ஓடும் ரயில்களில் பெண்களிடம் செயின் பறிப்பு – பொறியியல் மாணவன் உட்பட இருவர் கைது

webteam

ஓடும் ரயில்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக பொறியியல் மாணவன் உட்பட இரண்டு பேரை திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் அடிக்கடி செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் மூலம் அவர்களுடைய முகங்களை ஆய்வு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர், புட்லூர், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை, கடம்பத்தூர், செஞ்சி பானம்பாக்கம், மணவூர், திருவாலங்காடு ரயில்களில் சோதனை நடத்தினர்.

அப்போது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஏற்கனவே குற்றம் செய்து தேடப்படும் குற்றவாளி போல் இருவர் முக உருவம் ஒத்துப்போனதால் அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் ரயில் நிலையம் வரும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் (22), திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் கௌரிசங்கர் பொறியியல் படிப்பை பாதியில் விட்டவர் என்பதும், போதிய வருமானம் இல்லாததால் இருவரும் ஒடும் ரயில்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 7 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.