நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரொக்க பணம், காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் டீக்கடை நடத்தி வந்த வடமாநிலத்தினர் இருவர் திட்டமிட்டு கொள்ளை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமக்கல் பெருமாள்கோயில் மேடு பகுதியில், நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்மி விலாஸ், டிபிஎஸ் வங்கியின் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 5-ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து பெட்டகத்தில் இருந்த 4.89 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஏடிஎம்-ல் இருந்த அலாரத்தை உடைத்து மிளகாய் பொடி தூவி, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மோப்ப நாய் சீமா மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் குற்றச் சம்பவம் எவ்வாறு நடைபெற்றுள்ளது என ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்தி: 'கேஸ் வெல்டிங்' மூலம் ஏ.டி.எம் உடைத்து 4 லட்சத்துக்கும் மேல் பணம் கொள்ளை
இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் ஒன்று அவ்வழியாக சென்றது தெரிய வந்தது. அந்த காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முடிவில், சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் இம்ரான் ஆகியோர் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த போலீசார் பணம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.