accused with police pt desk
குற்றம்

‘உங்களுக்கு கடன் பெற தகுதியுள்ளது’ ஆன்லைன் மூலம் 31 பேரிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது!

17 மாவட்டங்களில் 31 நபர்களிடம் ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றவாளிகள் இருவரை தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

webteam

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர், டாடா கேபிட்டல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, “உங்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற தகுதியுள்ளது. ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கிக் கணக்கு எண்ணுக்கு பணம் போடுவோம்” என்றுள்ளனர். தொடர்ந்து அவரின் ஆதார் கார்டு, PAN கார்டு, ஃபோட்டோ, வங்கி பரிவர்த்தனை போன்ற விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர்.

sim card

இதைத் தொடர்ந்து சுரேஷ் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு படிவம் அனுப்பியுள்ளனர். அதன்மூலம் சுரேஷின் வாங்கிக் கணக்கு தகவல்கள் அனைத்தையும் கேட்டுப் பெற்றுள்னர். இந்நிலையில், சுரேஷின் வங்கிக் கணக்கில் இருந்து 24,955 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட சுரேஷ், உடனடியாக தஞ்சை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாகவும் காவல் நிலையத்திற்கு நேரில் சென்றும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சைபர் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சுரேஷிடம் பேசிய செல்போன் எண்களை வைத்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் அரக்கோணத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அரக்கோணம் சென்ற தனிப்படையினர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தீசன் (34), வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (34) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 செல்போன்கள், 19 சிம்கார்டுகள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்து தஞ்சைக்கு அழைத்து சென்று விரிவாக விசாரணை மேற்கொண்டனர்.

cell phones

விசாரணையில் இவர்கள் இருவரும் தஞ்சை, கோவை, கடலூர், திருப்பூர், ஈரோடு உட்பட மொத்தம் 17 மாவட்டங்களில் 31 பேர்களிடம் பல லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளதாகவும், கொலை, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இவர்கள் மீது உள்ளன என்றும் தெரியவந்ததாகவும் சைபர் க்ரைம் காவல்துறையினர் தெரிவித்தனர்.