ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான இணையதள முகப்பில் (Online Portal) திருத்தம் செய்து ரூ.78 லட்சம் மோசடி செய்த இருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் அளித்த புகாரில், தான் வெளிநாடுகளுக்கு துணி வகைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதற்கென மத்திய அரசின் வெளிநாட்டு வணிகம் தொடர்பான DGFT இணையதள முகப்பில் (Online Portal) கணக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அரசாங்கம் தனக்கு அளித்திருந்த இன்சென்டிவ் பாயிண்ட்களை தன்னுடைய அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு மோசடி நபர்கள் மாற்றிவிட்டதாகவும் அதனால் தனக்கு ரூ.78,32,444 இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.
மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர், DGFT போர்டல் ஐ.பி விவரங்கள், மோசடி நபர்களால் மாற்றியமைக்கப்பட்ட மொபைல் எண், இமெயில் ஐடி யின் ஐ.பி விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, குற்றவாளி குறித்த தகவல்கள் சேகரித்தனர். மேலும் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்ததின் பேரில் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் டெல்லியில் விசாரணைசெய்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட அருண்குமார்(41) மற்றும் சச்சின் கார்க் (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 2 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 1 பென்டிரைவ் மற்றும் 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
இக்குற்றத்திற்கு மூளையாக செயல்பட்ட பர்வீன் அகர்வால், மனிஷ் அகர்வால் ஆகிய இருவரும் இதேபோன்ற மற்றொரு வழக்கில் ஹரியானா மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதால், மேற்படி குற்றவாளிகள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் சச்சின் கார்க் ஆகிய இருவரும் சென்னை அழைத்து வரப்பட்டு இன்று (19.02.2022) நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். பெருகி வரும் சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.