குற்றம்

நாமக்கல்லில் 6 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரிக்கு சீல் - இருவர் கைது

Sinekadhara

குமாரபாளையம் அருகே 6 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் புகாரின்பேரில்  டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான உரிமையாளரை தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரி இயங்கி வருவதாக குமாரபாளையம் வருவாய் ஆய்வாளர் விஜய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் வட்டாட்சியர் தமிழரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, மினரல் என்டர்பிரைசஸ் என்ற பெயரில், கடந்த 6 வருடங்களாக அனுமதி பெறாமல் கல் குவாரி இயங்கி வந்தது தெரியவந்தது.

அப்போது அங்கே செயல்பட்டுக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர், அனுமதி இன்றி செயல்பட்ட நிறுவனத்தின் மீது குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநர் ரமேஷ் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநரான ரங்கசாமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான குவாரி உரிமையாளர் சண்முகத்தை தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி கல்குவாரியில் விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது குமாரபாரபாளையம் பகுதியில் 6 ஆண்டுகளாக அனுமதியில்லாமல் இயங்கி வந்த குவாரி மீது நடவடிக்கை எடுத்திருப்பது, அதிகாரிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள தற்போது நடவடிக்கை எடுத்தார்களா என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தை மதிப்பீடு செய்து அதற்கான இழப்பீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.