குற்றம்

தெலங்கானவை உலுக்கும் வழக்கறிஞர் தம்பதியர் படுகொலை: போலீஸ் வைத்த ட்விஸ்ட்!

webteam

கடந்த புதன்கிழமை நடுரோட்டில் நடந்த வழக்கறிஞர் தம்பதி படுகொலை சம்பவம் ஒட்டுமொத்த தெலங்கானாவையும், குறிப்பாக ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை உலுக்கி வருகிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தம்பதியினர் கட்டு வாமன் ராவ் (Gattu Vaman Rao), நாகமணி (Nagamani) என்பவர்கள். இருவரும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். பொதுநல வழக்குகளை எடுத்து நடத்தி வந்துள்ளனர் இருவரும். இதனால் அவர்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்திருக்கிறது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் இருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள ராமகிரியில் வழக்கறிஞர் தம்பதிகள் தங்கள் காரில் வந்துகொண்டிருந்தபோது திடீரென காரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் சராமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே நாகமணி உயிரிழக்க, வாமன் ராவ் பலத்த காயங்களோடு நடுரோட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிக்க, அவரை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே, `குண்டா சீனிவாசன் என்பவர்தான் எங்களைக் கொல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறார்' என வாக்குமூலம் கொடுத்துவிட்டு மருத்துவமனை அடையும் முன்பே உயிரிழந்துவிட்டார். காரில் சேஸிங், நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது போன்ற காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக வெளியிட, அது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்குத் தொடர்பாக, போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்படி, வாமன் ராவ் இறக்கும் தறுவாயில் குறிப்பிட்ட குண்டா சீனிவாசன் என்பவர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இது கூடுதல் பரபரப்பை பற்ற வைத்தது.

விசாரணையில், குண்டா சீனிவாசனும், வாமன் ராவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவருக்கும் கோயில் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. அதாவது, கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக சிலர் வீடு கட்டி வருகின்றனர். இதன் பின்னணியில் குண்டா சீனிவாசன் வீடு கட்டுபவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் வழக்கறிஞர் தம்பதியினர், கோயில் நிலத்தில் வீடு கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர். அதிலும் கேட்காத நிலையில்தான், குண்டா சீனிவாசன் உட்பட உள்ளூர் ரியல் எஸ்டேட் உரிமையளர்கள் சிலர் மீது புகார் கொடுத்திருக்கின்றனர் வழக்கறிஞர் தம்பதியினர். இதன் பின்னணியில் கொலை நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளான குண்டா சீனிவாசன் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலை முன்பே கணித்த தம்பதி?

இந்த வழக்கறிஞர் தம்பதியர் சமூக ஆர்வலர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக, நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து மக்களின் நலனுக்காக வாதாடி வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தெலங்கானா கரீம்நகரை சேர்ந்த ஜீலம் ரங்கையா என்பவரைக் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் மர்மமான நிலையில் உயிரிழந்திருந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தக் கோரியும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நாகமணி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த செப்டம்பரில் தெலங்கானா கரீம்நகரை சேர்ந்த ஜீலம் ரங்கையா என்பவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பிறகு, அவர் மர்மமான நிலையில் அவரின் உயிரிழப்பில் சந்தேகம் எழுப்பி நாகமணி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் காரணமாக தம்பதியினருக்கு நிறைய மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்தே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், போலீஸார் தொந்தரவு அதிகமாக இருக்கிறது என்றும் மனு தாக்கல் செய்திருந்துள்ளனர். கடந்த வாரம் கூட பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி இருந்துள்ளனர். இந்தநிலையில் தான் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸின் ட்விஸ்ட்!

இப்போது இந்த வழக்கில் ஒரு திருப்பம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, தம்பதியினர் தொடர்பாக தெலங்கானா போலீஸின் நடவடிக்கை கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு முன்னர், மாநில காவல்துறையினர் தம்பதியினர் தொடர்பாக ஒரு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை கேட்டுள்ளனர். மேலே சொன்ன, ஜீலம் ரங்கையா கஸ்டடி மரணம் சர்ச்சைக்கு பின் செப்டம்பர் 18, 2020 அன்று, தெலுங்கானாவின் பார் கவுன்சிலுக்கு பெடப்பள்ளி மாவட்டத்தின் மந்தனி காவல் நிலைய வட்ட ஆய்வாளரிடமிருந்து (சிஐ) வக்கீல்கள், வாமன ராவ் மற்றும் நாகமணி ஆகியோரின் கல்வித் தகுதிகளை காவல்துறை அறிய விரும்பி ஆர்டிஐ தாக்கல் செய்திருந்துள்ளது.

இந்த வழக்கறிஞர் தம்பதியினர் மாநில பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கிறார்களா, தெலுங்கானாவின் பார் கவுன்சிலின் பாதுகாப்பு அவர்களிடம் இருக்கிறதா, தம்பதியினர் மீது ஏதேனும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதா, தம்பதியினருக்கு எதிராக பார் கவுன்சிலுக்கு ஏதேனும் புகார்கள் வந்ததா எனக் காவல்துறை சார்பில் அந்த ஆர்டிஐயில் கேள்வி எழுப்பப்பட்டிருகிறது. இப்படி காவல்துறை எதற்காக இருவரின் தனிப்பட்ட தகவல் தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்ப வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரங்கள் தெலங்கானாவில் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.