டெல்லியில் டிவி நிருபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
புதுடெல்லி அருகிலுள்ள காஸியாபாத்தைச் சேர்ந்தவர் அனுஜ் சவுதாரி. இவர் சஹாரா சமய் என்ற இந்தி சேனலில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலர். நேற்று மாலை ராஸாப்பூர் கிராமத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் அனுஜ். அப்போது மோட்டார் பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த இரண்டு பேர், வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் புகுந்தனர்.
அங்கிருந்த அனுஜை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் அவரது வயிறு மற்றும் கையில் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். சுட்டவர்கள் பைக்கில் வேகமாக தப்பியோடினர். இதையடுத்து அனுஜை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.