செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் தனிப்படை போலீசார் அவ்வப்போது வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி, கோமஸ்புரம் சேதுபாதை ரோடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த திருநெல்வேலி ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ், தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் இளம் சிறார் ஒருவர் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காரை சோதனை செய்ததில் காரில் சுமார் 11 கிலோ 500 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஜெயராஜ், கார்த்திக் ராஜா மற்றும் இளம் சிறார் ஆகியோரை பிடித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 11 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கஞ்சாவை இவர்கள் எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.