கோவையில் இரு கோயில்களின் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள சக்தி மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில்களில் நேற்று நள்ளிரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம நபர் முதலில் மாரியம்மன் கோயிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு இருந்த அறையின் கதவை உடைத்து பீரோவில் இருந்த பொருட்களை திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர் , கோயிலின் பூட்டை உடைக்க முயற்சி மேற்கொண்டு உள்ளார். ஆனால் அந்த பூட்டை உடைக்க முடியாததால் உண்டியலில் இருந்த பணம் திருடுபோகாமல் தப்பியது .இந்நிலையில் காலை கோயிலின் பூட்டை உடைத்ததை பார்த்த பூசாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
பின்னர் கோயிலில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலின் உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி உள்ளது. என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. அது குறித்து தகவல்களை சேகரிக்கும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.