மதுரையில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இதயம் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்த காப்பகத்தில் 2 குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பாக ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நகைக்கடை உரிமையாளர், சில்வர் பட்டறை தொழிலாளி, குழைந்தைகளை விற்பனைக்கு வாங்கிய தம்பதி, காப்பக நிர்வாகி என 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தை விற்பனைக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட இடைத்தரகர்களான செல்வி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
செல்வி என்ற இடைத்தரகர், ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பில் தன்னார்வலராக இருக்கிறேன் எனக்கூறி வலம் வந்ததாகவும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் குழந்தையில்லா தம்பதிகளை அவர் மூளை சலவை செய்ததும், குழந்தைகளை விற்பனை செய்ய கமிஷனாக ரூ.20 ஆயிரம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், காப்பகத்தின் உரிமையாளர்கள் இரண்டு பேரையும் தனிப்படை அமைத்து கடந்த 2 நாட்களாக போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமார், மாதர்ஷா ஆகியோரை தேனி மாவட்டத்தின் கேரள எல்லைப்பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை மதுரை அழைத்துவந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 9 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் தீர விசாரித்தால் மட்டுமே மேலும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.