குற்றம்

நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து செல்லும் அதிர்ச்சி காட்சி!

PT

நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணைக் கட்டையால் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோன் ஆகிய இரண்டையும் கொள்ளையடித்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணைத் தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வ.உ.சி. சாலைப் பகுதியில் வசித்து வருபவர் சீதா லட்சுமி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

பேராசிரியையை மரக்கட்டையால் தாக்கிய இளைஞர்!

அந்தவகையில், கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் நடைப்பயிற்சிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்ற இளைஞர் ஒருவர், தான் வைத்திருந்த மரக்கட்டையால் பேராசியையின் தலையின் பின்பக்கமாகத் தாக்கியுள்ளார். இதில், மயங்கி அவர் கீழே விழுந்தவுடன் அவர் கால்களைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோன் ஆகிய இரண்டையும் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் அந்த இளைஞர்.

பைக்கை விற்க முயன்ற போது..

இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செந்தில் குமார் (32) என்பதும், தற்போது காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பகுதியில் வசித்து வருவதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி கோட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் இருசக்கர வாகனத்தை இளைஞர் செந்தில் குமார் விற்க முயன்றபோது, காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர்.

தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து காலில் முறிவு

மேலும், போலீசார், அவரைப் பிடிக்க முயன்றபோது, தப்பிச் செல்ல முயற்சித்து தவறி விழுந்ததில், காலில் முறிவு ஏற்பட்டு தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் இளைஞர் செந்தில் குமார். 

கஞ்சா போதையில் நிகழ்த்தப்பட கொடூரம்

இந்நிலையில், பேராசிரியையைத் தாக்கி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கஞ்சா போதையில் இளைஞர் செந்தில் குமார் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பட்டப் பகலில் பெண் ஒருவரைத் தாக்கி தரதரவென இழுத்துச் சென்று செல்ஃபோன் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது திருச்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.