மும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி ரெயிலில் பயணிகளிடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து டெல்லி வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "நேற்று இரவு சாப்பிட்ட பின் திடீரென அனைவரும் உறங்கி விட்டோம். காலையில் டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையம் வந்ததும் விழித்து பார்த்த போது எங்களிடமிருந்த நகை, பணம் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. உடனே நாங்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம். புகாரும் அளித்துள்ளோம்" என கூறினர்.
பயணிகளிடம் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். பயணிகள் உண்ட உணவில் மயக்க மருந்து இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.