குற்றம்

”போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரித்துவிட்டார்கள்” - கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் சகோதரர்கள் மனு

webteam

போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து தங்களுடைய சுமார் 1 கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்துவிட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் சகோதரர்கள் நான்கு பேர் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் கிராமத்தை சார்ந்த ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய இரண்டு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவினைக் கொடுத்தனர். அந்த மனுவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் பாகலூர் அருகே பெலத்தூர் கிராமத்தில் 1.97 ஏக்கர் நிலம் எனது தந்தை வழி சொத்தாகும். இந்த நிலத்தில் கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலம் முழுவதும் இன்று வரை எங்களது சுவாதீனத்தில் மட்டுமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் எங்களது சொத்தை அபகரிக்கும் வகையில், பாகலூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் போலி ஆவணம் தயாரித்து மேற்படி நிலத்தை தானம் பெற்றதாக கூறி மோசடி செய்துள்ளார். மேலும் அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மேற்கண்ட நிலத்திற்கான பட்டா மாற்றுதலும் செய்துள்ளார். இதற்கு சாதகமாக வருவாய்த்துறையினர், சார்பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், போன்றவர்கள் உறுதுணையாக செயல்பட்டுள்ளனர்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”சுமார் 1 கோடி மதிப்பு உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தினை மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு போலி ஆவணங்கள் தயார் செய்த பாஸ்கர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் சார்பதிவாளர், வருவாய் அலுவலர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ரத்து செய்து சுமார் 1 கோடி மதிப்பிலான சொத்தை மீட்டுத்தர வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.