குற்றம்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டில் 6912 குழந்தை திருமணங்கள் தடுப்பு: TNCPCR தகவல்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டில் 6912 குழந்தை திருமணங்கள் தடுப்பு: TNCPCR தகவல்

நிவேதா ஜெகராஜா

கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் 6,912 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் பெற்றோர் இருவரை இழந்த 93 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 3,592 குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி இன்று கூறியுள்ளார்.

இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, ஆணைய உறுப்பினர் டாக்டர் ராமராஜ் ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான மறுசீராய்வு கூட்டம் நடத்தினர். ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அரசு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, “இந்த ஆணையம், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்கவும், கொரோனா 3-ஆவது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்டந்தோறும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி இன்று நாமக்கலில் நடைபெற்ற கூட்டத்தில் குழந்தைகள் நலன் சார்ந்த அரசு துறைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான ஆலோசனைகளும், ஒருவேளை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்துதல், படுக்கை வசதிகள் அமைத்தல், தீவிர கண்காணிப்பு பிரிவு படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் முதல் மற்றும் இரண்டாவது அலை கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண உதவிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் தாய்- தந்தையரை இழந்த 93 குழந்தைகளுக்கும், பெற்றோரில் ஒருவரை இழந்த 3592 குழந்தைகளுக்கும் அரசு உதவி கிடைக்க ஆணையம் சார்பாக இதுவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஓர் குழந்தைக்கும், பெற்றோரில் ஒருவரை இழந்த 105 குழந்தைகளுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் பேசியவர் கொரோனா காலத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 6,912 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இச்சம்பவங்களில் காவல்துறையின் மூலம் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து கண்காணிக்க அரசு துறை அலுவலர்களுக்கு ஆணையம் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசும்போது, “இவற்றை முழுமையாக கண்டறிந்து சமூக பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோர்தான் அதிகளவில் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர்” என்றார்.

குழந்தை திருமணம் தடுப்பு போலவே, தமிழ்நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்கும் ஆணையம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். சமீபத்தில் மதுரையில் கடத்தல் சம்பவத்திலிருந்து 7 குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாகவும், 5 குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 குழந்தைகள் தாய் தந்தையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார் அவர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அரசு துறை அலுவலர்கள் அறிந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் மல்லிகை செல்வராஜ், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, சார்பு நீதிபதி வி. ஸ்ரீவித்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் டாகுர், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- துரைசாமி