குற்றம்

தலைமைச் செயலக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

தலைமைச் செயலக ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

webteam

சென்னை கொளத்தூரில் தலைமைச் செயலக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளியை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை கொளத்துார் வளர்மதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நம்பிராஜன். சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நிருபராக உள்ளார். இவரது மனைவி பிரபா தலைமைச் செயலகத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு கணவன் மனைவி இருவரும் கோட்டைக்கு வேலைக்கு சென்று விட்டனர். மாலை அதே வீட்டில் குடியிருக்கும் லட்சுமி என்பவர் பார்த்தபோது நம்பிராஜனின் வீடு திறந்து கிடந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது வீட்டின் தாழ்ப்பாள் உடைந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக நம்பிராஜனுக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்தார். நம்பிராஜன் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவின் லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கொளத்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.