செய்தியாளர்: மகேஷ்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நவபாஷாண சிலைகள், யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மூன்று நாட்களாக ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மத்திய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்,
இதையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 25 கோடி மதிப்பிலான 2 அடி உயரம் 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலையும், 35 லட்சம் மதிப்பிலான யானை தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இவர்களுடைய கூட்டாளிகள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.