குற்றம்

திருவள்ளூர்: கல்லூரி மாணவர்களுக்கு ரயிலில் போதை மாத்திரை; வசமாக சிக்கிய கும்பல்

திருவள்ளூர்: கல்லூரி மாணவர்களுக்கு ரயிலில் போதை மாத்திரை; வசமாக சிக்கிய கும்பல்

kaleelrahman

கல்லூரி மாணவர்களுக்கு ரயிலில் போதை மாத்திரை விற்பனை செய்த 12 பேரை திருவள்ளூர் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 20 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ தொடங்கி கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு, போதை மாத்திரை விற்பனை தொடர்பாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி கொண்டிருந்த திமோதி, பிரித்திவி, ஸ்ரீராம், ரோஹன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் போதை மாத்திரைகள், குட்கா, பொட்டலங்கள், போதை தரும் வில்லைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், திரிபுரா மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி அதை தனித்தனியாக பிரித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், ரயில் நிலையங்களிலும், ரயிலில் பயணம் செய்யும்போது விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்படி தனிப்படையினர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இருந்த ஹரீஷ், லோகேஷ், நரேஷ் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவும், ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த சச்சின், சரவணன், வாசு, ரகுமான், கௌவுஸ்ருதின், யூசுப் ஆகியோரிடமிருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த 12 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.