செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் சாலையில் உள்ள டயர் கடையில் கடந்த 28-ஆம் தேதி கோமதி (39) என்பவர், வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். அப்போது கடைக்குள் புகுந்த 2 பேர், கடையின் ஷட்டரை உள் பக்கமாக இழுத்து மூடிவிட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி கோமதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல் மற்றும் செல்போனை ஆகியவற்றை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து ஷட்டரை திறந்து கொண்டு வெளியே வந்த கோமதி, அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), அமைந்தகரையைச் சேர்ந்த கணேஷ் (34), தாம்பரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (24) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.