குற்றம்

திருப்பூர்: சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ததாக பேருந்து நடத்துனர் போக்சோவில் கைது

திருப்பூர்: சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ததாக பேருந்து நடத்துனர் போக்சோவில் கைது

kaleelrahman

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்ததாக தனியார் பேருந்து நடத்துனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (38). இவர், ஈரோடு - பள்ளபட்டி செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்க்கிறார். வெள்ளகோவில் கள்ளம் புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி வேலைக்குச் செல்லும்போது அந்த பேருந்தில் செல்வது வழக்கம். அப்போது சண்முகம், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென கடந்த 3 மாதமாக அந்த சிறுமி பணிக்குச் செல்லவில்லை. பெற்றோர்கள் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது பெரியம்மா வீட்டு விசேஷத்திற்கு வந்த சிறுமியிடம், ‘இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தாய்‘ என பெற்றோர் கேட்டபோது தான் கம்பெனியில் தங்கி வேலை பார்த்ததாக கூறியிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென போன் செய்த சண்முகம் சிறுமியை உடனே கிளம்பி வருமாறு அழைத்துள்ளார்.

இதனை அறிந்த பெற்றோர் அழைத்து யார் என்று கேட்டபோது சிறுமி பதில் கூறவில்லை. பின்னர், போனில் பேசிய நபரை திருப்பி அழைத்தபோது, சண்முகம் பேசுவதாகவும் என் மனைவியை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சண்முகம் யார் என்று சிறுமியிடம் கேட்டபோது எனது கணவர் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து செல்போனை நம்பரை வைத்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர் சண்முகத்தை அழைத்து விசாரித்தபோது, ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் பெற்றோர்கள் சிறுமியை கடத்திச் சென்ற சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சிறுமியின் பெற்றோர் வற்புறுத்தினர். இதனைத்தொடர்ந்து தாராபுரம் டிஎஸ்பி தனராசு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம், நடத்துனர் சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.