செய்தியாளர்: சுரேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் (48) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது தனது அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவர் அவருடைய மூன்று ஏக்கர் நிலத்தை ரூ.38 லட்சத்திற்கு பைனான்சியரிடம் அடமானம் வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திம்மராயன் பைனான்ஸியரிடம் இருந்து அந்த இடத்தை வாங்கி தனது பெயரில் மாற்றியுள்ளார்.
இதன் காரணமாக சக்கரவர்த்தி மற்றும் திம்மராயன் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திம்மராயனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.