திருச்சி பீமநகர் காவலர் குடியிருப்பில் தாமரைச்செல்வன் என்பவரை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலைக்குப் பின்னர், காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்துள்ளனர். தாமரைச்செல்வனின் மனைவியை சதீஷ் கிண்டல் செய்தது இந்த கொலையின் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
செய்தியாளர் வி.சார்லஸ்
திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கீழ தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அப்போது நண்பர்கள் மத்தியில் சதீஷை தாமரைச்செல்வன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்துதான் சதீஷ் தனது நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோரிடம் தகவல் கொடுத்த நிலையில், கூட்டாக சேர்ந்து தாமரைச்செல்வனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இன்று திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை அரிவாளால் வெட்டிய பொழுது தாமரைச்செல்வன் காவலர் குடியிருப்புக்கு உள்ளே தப்பி ஓடி வந்து தரைதளத்தில் இருந்த வீட்டின் உள்ளே ஓடியிருக்கிறார். அது திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவரது குடியிருப்பு. விடாமல் தாமரைச் செல்வனை விரட்டி வந்த ஐந்து பேரும் உள்ளே புகுந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு ஓடினர்.
அப்பொழுது அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். எஞ்சிய நான்கு பேரையும்காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில்தான் பல்வேறு விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
தாமரைச்செல்வனின் மனைவி சந்திரா நிப்பான் பெயிண்ட் கம்பெனியில் வேலை பார்த்த பொழுது சதீஷ் கிண்டல் செய்து சண்டையிட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தன் கணவர் தாமரைச்செல்வனிடம் சொன்ன பொழுது தாமரைச்செல்வன் தன்னுடைய நண்பர்களை வைத்து சதீஷை கடந்த ஏழு மாதத்துக்கு முன்னதாக தாக்கியிருக்கிறார் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில்தான் சதீஷ், பிரபாகரன், இளமாறன், நந்து, கணேசன் ஐந்து பேரும் சேர்ந்து திட்டமிட்டு தாமரைச்செல்வனை கொலை செய்துள்ளனர். தற்பொழுது 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமரைச்செல்வன் மனைவியை கிண்டல் செய்து சண்டையிட்டதால், நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தில் சதீஷின் வேலை பறிபோனதும் இந்த கொலைக்கான முக்கிய காரணம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட தாமரைச் செல்வனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடல்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சம்பவத்தைக் கண்டித்து, திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட தாமரைச் செல்வன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது கொலைக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.