இங்கிலாந்தில் பெண் ஒருவரிடம் திருட முயன்ற மர்ம மனிதரை தெரு நாய் ஒன்று விரட்டி அடிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஆபத்துக் காலங்களில் மனிதர்களை விட நாய்களே திறமையாக செயல்பட்டு உரிமையாளர்களின் உயிரை உற்ற நேரத்தில் காக்கும் என்பதற்காகவே. இதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்து நகரில் உள்ள பிரதான சாலையில் பெண் ஒருவர் பகல் நேரத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம மனிதர் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்துள்ளார். இந்த காட்சியை தெருவில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்று உன்னிப்பாக கவனித்துள்ளது. அப்போது அந்த நபர், பெண்ணிடம் இருக்கும் பையை திருட முயற்சித்தபோது, தெருவில் நின்று கொண்டிருந்த அந்த நாய் வேகமாக ஓடி அந்த நபரின் காலை கடித்தது. நாயிடம் மாட்டிக் கொண்ட அந்த நபர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடியுள்ளார். இந்த நிகழ்வு அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை இங்கிலாந்து போலீசார் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பெண்ணை காப்பாற்றிய நாயை, ‘ஹீரோ’ என்று தெரிவித்துள்ளார்.