குற்றம்

சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் 66 சவரன் தங்கம், ரூ.13.5 லட்சம் பணம் கொள்ளை

webteam

சென்னையில் பிரபல கோனிகா கலர் லேப் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் உதவி ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்ள பிரபல போட்டோ நிறுவனமான கோனிகா கலர் லேபின் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி அருணா தேவி. கடந்த 20 வருடங்களாக சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி தனது மனைவி அருணா தேவியுடன் சந்தோஷ் குமார் சொந்த ஊரான ஹைதராபாத்தில் சுப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் பின்னர் நேற்று இரவு மாலை 7.30 மணியளவில்  சந்தோஷ் குமார் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட சந்தோஷ்குமார் அதிர்ச்சியடைந்து, முதல் தளத்திற்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு  பொருட்கள் சிதறி இருந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 66 சவரன் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 13.5 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த சந்தோஷ்குமார் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மண்டல இணை ஆணையர் மனோகர், துணை ஆணையர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வீட்டில் சோதனை செய்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், மேலும் ஒரு கொள்ளை சம்பவம் சென்னையில் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.