பர்கூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள், அங்குள்ள ஒரு தனியர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அவரது உறவினரான போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டி, வால்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சந்திரகணேஷ் (32) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதை மாணவிக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி, மாணவி தனது வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது, சந்திரகணேஷ், தனது நண்பர்களான டீக்கடை நடத்திவரும் ஜீவா (20), ஓட்டுநர் ரமேஷ் (39) ஆகியோருடன் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மாணவியை மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருடன் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்திரகணேஷ், ஜீவா, ரமேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். சந்திரகணேஷிடமிருந்து ஆபாச விடியோ பதிவும் கைப்பற்றப்பட்டது.