குற்றம்

மேட்டுப்பாளையம்: வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு; 3 பேர் கைது

JustinDurai
வன விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த மூன்று பேர் மேட்டுபாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள சிறுமுகை, காரமடை பகுதிகளில் வனத்தை ஒட்டியுள்ள இடங்களில் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. வெடி மருந்துடன் இரும்பு துகள்கள், சிறு கற்கள் போன்றவற்றை சேர்த்து கட்டி இதனை சற்று அழுத்தினாலும் வெடித்து சிதறும் வகையில் தயாரிக்கப்படும் இந்த ஆபத்தான வெடி மீது கோழி கொழுப்பை  தடவி காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் நடமாடும் பகுதியில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர் வேட்டை கும்பல்.இதனை கடித்து தலை சிதறி இறக்கும் விலங்குகளை இறைச்சிக்காக எடுத்து சென்று விடுகின்றனர்.
மிகவும் ஆபத்தான இந்த வேட்டை முறையை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சிறுமுகை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சிலர் அவுட்டுக்காய் தயாரித்து வருவதும் அதனை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாட முயன்று வருவதும் பற்றி தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு நாட்டு வெடிகுண்டுகளுடன் இருந்த இழுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த மார்டின், செல்வம் மற்றும் சிலுவை முத்து ஆகிய மூவரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து அவுட்டுக்காய் என்னும் 17 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டதின் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், சட்ட விரோத வெடிமருந்து பயன்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இந்த மூவரையும் சிறுமுகை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.