குற்றம்

கடலோர காவல்படையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 கோடி மோசடி - 3 பேர் கைது

கடலோர காவல்படையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 கோடி மோசடி - 3 பேர் கைது

நிவேதா ஜெகராஜா

கடலோர காவல் படையில் வேலை வாங்கி தருவதாக 200 பேரிடம் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை மாதவரம் கில்பன் நகரை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “சென்னை கௌரிவாக்கத்தில் வசித்து வரக்கூடிய ராஜேஷ் ரகுராம் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு தனது கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார். அதில் கடலோர காவல் படையில் பணியில் சேர்வதற்கான பயிற்சி வகுப்பு நடத்துவதாகவும், பயிற்சி முடித்தவுடன் மத்திய அரசின் கடலோர காவல் படையில் பணி வாங்கி தருவதாக தெரிவித்திருந்தது. மேலும் அதற்கு 5.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி, ராஜேஷ் ராகுராமின் நண்பரான சொர்ண செந்தில் என்பவருக்கு பணத்தை அனுப்பினேன்” என தெரிவித்துள்ளார்.

பின்னர் பயிற்சி வகுப்பை முடித்தவுடன், கடலோர காவல் படையில் பணிபுரியக்கூடிய ஹேமலதா என்பவர் மூலமாக பணி நியமன ஆணை வாங்கி தருவதாக தெரிவித்தனர். பல மாதங்கள் கழித்து பணி நியமன ஆணை ஒன்றை அனுப்பினர். இந்த ஆணையை கொண்டு சென்று விசாரித்த போது, அது போலி என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து புகார் அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் கடலோர காவல் படையில் வேலை வாங்கி தருவதாக 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் 5 கோடி ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட வடபழனியை சேர்ந்த ஹேமலதா(48), ஓ.எம்.ஆரை சேர்ந்த சொர்ண செந்தில்(34), ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் ரகுராம்(40) ஆகிய மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.