குற்றம்

சிபிஐ அதிகாரி போல் நடித்து மருத்துவ கல்லூரி நிர்வாகியிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்

kaleelrahman

மதுரவாயலில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரி போல் நுழைந்து 10 கோடி கேட்டு மிரட்டிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர், 7 வது தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (40). இவர், ஆலப்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டிற்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல், சிபிஐ அதிகாரிகள் என்று அடையாள அட்டையை காட்டி வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் வெளியேற்றியுள்ளனர்.

மேலும் சிலை கடத்தல் வழக்கில் ராகேஷ் சம்மந்தப் பட்டிருப்பதால் அவர்மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அதிலிருந்து அவரை தப்பிக்க வைக்க ரூ.10 கோடி கேட்டு மிரட்டி அறையில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராகேஷ் அளித்த தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் இருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

அதில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்ட நிலையில் 5 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் நரேந்திர நாத், ஸ்டாலின், யோவான், ராமசுப்ரமணி, சங்கர் என்பதும் ராமசுப்பிரமணியன் என்பவர் ராகேஷின் நண்பர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது இவர்கள் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி எதற்காக பணம் கேட்டு மிரட்டினார்கள் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர், திரைப்பட பாணியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.