பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி வாயிலாக விஜிலென்ஸ் ஆய்வாளர் என கூறி மிரட்டி பணம் கேட்ட துணை நடிகரை காவல்துறை கைது செய்துள்ளானர்.
சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் இ.கருணாநிதி. இவருக்கு நேற்றிரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசியவர், தான் லஞ்ச ஒழிப்புதுறையில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும் அதற்காக சோதனை செய்ய வரவுள்ளோம் எனவே நீங்கள் பணம் கொடுத்தால் சோதனையை கைவிடுகிறோம் என்று கூறியுள்ளார்.
அதற்கு பல்லாவரம் எம்.எல்.ஏ பணம் கொடுக்க ஒப்புக் கொண்டு குரோம்பேட்டையில் உள்ள அடையார் ஆனந்தபவன் வர சொல்லியிருக்கிறார். விஜிலென்ஸ் போலீசிடம் 3 லட்சம் ரூபாய் தருவதாக எம்.எல்.ஏ கூற 6 லட்சம் கொடுங்கள் என லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் கூறி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளனர். பின்பு எம்.எல்.ஏ பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்று காத்திருங்கள் பணம் தயார் செய்து கொண்டு வருகிறேன் என்றார். இதனைதொடர்ந்து விஜிலென்ஸ் அதிகாரிக்கு வழக்கறிஞர்கள் சிலர் தொடர்பு கொண்டு மிரட்ட, பயந்து போன அந்த அதிகாரி எம்.எல்.ஏ. பணத்துடன் வந்ததும் பணத்தை வாங்காமல் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலி அதிகாரியை தேடி வந்த நிலையில் திருவொற்றியூரை சேர்ந்த சினிமா துணை நடிகர் வரதராஜன் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் 35 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த விரக்தியில் பணம் சம்பாதிக்க போலியாக விஜிலென்ஸ் அடையாள அட்டையை தயாரித்து எம்.எல்.ஏ வை மிரட்டி பணம் கேட்டு மிரட்டியதாக ஒப்புக் கொண்டார். இவர் ஐந்தாம் படை படத்திலும், ரேகா ஐ.பி.எஸ் தொடரிலும் நடித்தவர் என தெரிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி 6 லட்சம் பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டதால்,எம்.எல்.ஏ ஏதேனும் தவறு செய்திருப்பாரா என விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.