குற்றம்

தூத்துக்குடி: நூதன முறையில் ரூ.39 லட்சம் மோசடி – நைஜீரிய நபர் கைது

webteam

தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தை வாட்ஸ் அப் மூலம் ஏமாற்றி 36,98,1800 பணத்தை மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பணிமய காட்வின் மனோஜ் (38), இவர், கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர், தூத்துக்குடி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், வாட்ஸ் அப் மூலம் டோகோவில் இருக்கும் வெடிஸ் அனிமல் ஹெல்த் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்திற்கு மருந்து ஏற்றமதி செய்ய இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சர்மா எண்டர்பிரைசஸ் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணா இண்டஸ்ட்ரீயில் இருந்து வாங்கி வெட்டிஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யுமாறு கேட்டதை நம்பி மொத்தம் 36 லட்சத்து 98 ஆயிரத்து 1,800 ரூபாய் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

இது குறித்து, தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் மூலம் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இசி பெடலிஸ் நுடுபுசி (Ese fidelis ndubuisi) என்பவர் வாட்ஸ் அப் மூலம் போலியான விளம்பரத்தை பதிவேற்றம் செய்து போலியான வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படையினர் 29.12.2022 ஆம் தேதி மும்பையில் உள்ள உள்வே நோட் என்ற பகுதியில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்து அழைத்துவந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர், பல நபர்களை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பலர் இந்த மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.