செய்தியாளர்: ராஜன்
கடந்த மார்ச் 05 அன்று, மாலை சுமார் 3 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்குச் செல்லும் ஷ்வே லின் யோன் என்ற இழுவைப்படகில் போதைப்பொருள் இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படை உடனடியாக விரைந்து மன்னார் வளைகுடாவிற்கு தெற்கே சந்தேகத்திற்குரிய கப்பலை இடைமறித்து, சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில், போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் உடனடியாக, அந்த கப்பலை தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மார்ச் 07 அன்று, இரவு 11.30 மணிக்கு, அந்த கப்பல் மற்றும் அதன் 09 பணியாளர்கள் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருள் கஞ்சா எண்ணெய் என்பதும், இது தோராயமாக 30 கிலோ எடை உள்ள நிலையில், இதன் சர்வதேச சந்தை மதிப்பு 33 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.